தஞ்சையில் திசைமாறிய இல்லற வாழ்க்கை; நம்பிக்கை துரோகத்தால் தொழிலதிபரைக் கொலை செய்த மனைவி

தஞ்சை காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் யூசுப் (45). தொழிலதிபர். இவர், குவைத் நாட்டில் வேலை செய்தபோது இலங்கையை சேர்ந்த அசிலா என்ற ரசியாவை (37) திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். குவைத்திலிருந்து தஞ்சைக்கு திரும்பிய யூசுப், அசிலா தம்பதியினர் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

தஞ்சையை அடுத்த குருங்குளம் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் விவசாய பண்ணையும் இவர்களுக்கு உள்ளது. கடந்த 25-ம் தேதி தொழிலதிபரான யூசுப் காரில் தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் காரை வழிமறித்தது. காரை விட்டு இறங்கிய யூசுப்பை அந்தக் கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. நடுரோட்டில் யூசுப் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யூசுப் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

கொலை செய்யப்பட்ட யூசுப்

போலீசார் நடத்திய விசாரணையில் யூசுப்பை கொலை செய்ய அவரின் மனைவி அசிலாவே கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், அசிலாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் தஞ்சையை சேர்ந்த ஒரு கூலிப்படையிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து யூசுப்பை கொலை செய்ய கூறிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கூலிப்படையினரிடம் போலீசார் விசாரித்தபோது, பணம் கொடுத்தது உண்மைதான். ஆனால், நாங்கள் கொலை செய்வதற்கு முன் வேறு நபர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று கூறினர்.

அதனால் போலீசார், மீண்டும் அசிலாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் திருச்சியைச் சேர்ந்த இன்னொரு கூலிப்படையினரிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்த தகவல் தெரியவந்தது. அதனால் அவர்களை போலீசார் தேடிவந்தனர். கணவரைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவி குற்றத்துக்காக அசிலா, கூலிப்படையைச் சேர்ந்த சகாதேவன் (26), பிரகாஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அசிலாவிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

யூசுப், அசிலா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் சொல்லிக் கொள்ளும்படி உறவினர்கள் இல்லை. அதனால் குவைத்தில் சம்பாதித்த பணத்தை தஞ்சாவூரில் முதலீடு செய்தனர். அசிலா, இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் பெயரில் சொத்துகள் எதுவும் வாங்கவில்லை. அனைத்து சொத்துகளும் யூசுப் பெயரிலேயே உள்ளது. இந்தச் சூழலில் மனைவி, குழந்தைகளை தஞ்சாவூரில் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்காக குவைத்துக்கு சென்றார். அப்போது அசிலாவின் வாழ்க்கை திசைமாறியுள்ளது. அந்தத் தகவல் தெரிந்ததும் யூசப்பிற்கும் அசிலாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அசிலா, திருச்சிக்கு வந்துள்ளார். மனைவி, குழந்தைகள் பிரிந்துச் சென்றுவிட்டதால் யூசுப்பின் வாழ்க்கையும் தடம் மாறியுள்ளது. இந்தத் தகவலைக் கேள்விபட்ட அசிலா அதிர்ச்சியடைந்தார். அதனால் யூசுப்பை தீர்த்துக்கட்டிவிட்டால் சொத்துகள் அனைத்தும் தனக்கு வந்துவிடும் என கருதியுள்ளார். அதனால்அவரை கொலை செய்ய தஞ்சை கூலிப்படையினருக்கு முதலில் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் யூசுப்பை கொலை செய்யவில்லை என்பதால் திருச்சி கூலிப்படையினரிடம் பணம் கொடுத்துள்ளார். திருச்சி கூலிப்படையினர் யூசுப்பை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்துவிட்டனர்.

போலீஸ் பிடியில் அசிலா

கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரித்தபோது குவைத்தில் யூசுப் வேலைக்குச் செல்லும் முன் மனைவியை நம்பாமல் சொத்துகள், நகைகள், பணம் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைத்திருந்துள்ளார். வங்கியில் உள்ளவர்களிடம் நட்பாக பழகிய அசிலா, நகைகள், பணத்தை எடுத்து ஆடம்பரமாக செலவழித்துள்ளார். இந்தத் தகவல் யூசுப்பிற்கு தெரிந்ததும் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அசிலா, அவருக்கு உதவிய வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகுதான் இருவரும் பிரிந்துள்ளனர்.

யூசுப்பை கொலை செய்த வழக்கில், அசிலா சிறைக்கு சென்றுவிட்டார். தடம் மாறிய திருமண வாழ்க்கையால் அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *