தேனியில் ஒரு அதிசய குழந்தை

தேனி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததாகக் கூறி அதை வாளியில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டுக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய வாளியைத் திறந்தபார்த்தபோது குழந்தையின் இதயம் துடித்தது. இந்த அதிசய குழந்தை குறித்த செய்தியை விரிவாகப் பார்ப்போம்.

கர்ப்பிணி ஆரோக்கியமேரி

தேனிமாவட்டம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. 6 மாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் ஆரோக்கியமேரியை தேனி கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது சுகபிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குறைப் பிரசவசம் என்பதால் குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. உடனே மருத்துவமனை ஊழியர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கருதி வாளியில் குழந்தையை வைத்து மூடி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைகளுக்கான இறப்பு சான்றிதழுக்கான பணியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குழந்தை
குழந்தை

பெண் குழந்தை

இந்தநிலையில் சோகத்துடன் குழந்தையை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் குழந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் ஏற்பாடு செய்த போது திடீரென குழந்தையின் இதயம் துடிப்பதை பார்த்து அனைவரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். மயானத்தில் குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் குழந்தை உயிரோடு இருப்பதை உறவினர்கள் கண்டறிந்தனர். இந்தத் தகவலைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உறவினர்கள் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. செயற்கை சுவாச கருவியுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கைக் கண்டித்த உறவினர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இறந்தததாகச் சொல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருக்கும் தகவல் அந்தப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *