சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே உள் கொசவன்பாளையத்தின் தி.மு.க பஞ்.தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
சென்னை திருநின்றவூர், கொசவன்பாளையம், லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் பரமகுரு (38). இவர் 14-ம் தேதி மாலை 4.45 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் வேலையை பார்வையிட்டு விட்டு பூந்தமல்லி மெயின்ரோட்டிற்கு வந்தார்.
அப்போது 3 பைக்கில் வந்தவர்கள் பரமகுருவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் இந்திய தண்டனைச் சட்டம் 302, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் உள்ளாட்சி தேர்தல் பகை என்ற கோணத்தில் போலீசார் முதலில் விசாரித்தனர். இந்தச் சமயத்தில் கொலையை நேரில் பார்த்த பரமகுருவின் மருமகன் பொன்ராஜ பெருமாள், போலீசாரிடம் சில முக்கிய தகவல்களைக் கூறினார்.
அதில், நானும் மாமா பரமகுரு, டிராக்டர் டிரைவர், மற்றும் சிலர் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பைக்கில் வந்த ராஜேஷ் மற்றும் 5 பேர் திடீரென மாமா பரமகுருவை வெட்டினர். அதைத் தடுக்க சென்ற எங்களை கத்தி முனையில் மிரட்டினர். எங்கள் கண் முன்னால் மாமாவை அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக குறிப்பிட்டிருந்தர். இந்தத் தகவலின்படி ராஜேஷை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாக இருந்தார்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநின்றவூர் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (33), அதே பகுதியைச் சேர்ந்த அப்புன் என்கிற ரவிக்குமார் (33), திருநின்றவூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலாநிதி (28), மேட்டு தெருவைச் சேர்ந்த ஆஜி என்கிற ஐயப்பன் (28), மேட்டு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (23), கோமதி புரத்தைச் சேர்ந்த சரவணன் (30)ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கைதான ராஜேஷிக்கும் கொலை செய்யப்பட்ட பஞ்.தலைவர் பரமகுருவுக்கும் கொசவன்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் மண் அள்ளுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. ராஜேஷ், ரவிக்குமார் ஆகிய இருவர் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட பரமகுரு, தி.மு.க.வில் உள்ளார். கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க உறுப்பினர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருநின்றவூரில் ஒரே வாரத்தில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. திருநின்றவூரில் செல்வராஜ் நகரில் டிராவல்ஸ் அதிபர் மகேந்திரன், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இவரும் சமுதாய பிரச்னைகளைத் தட்டிக்கேட்டதால் இளைஞர்களால் சொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் திருநின்றவூர் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.