உயிரைப் பறித்த உள்ளாட்சி தேர்தல்… திருநின்றவூர் கொடூரம்

சென்னை திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் பரமகுரு (38). வழக்கறிஞர். இவரின் மனைவி ஷீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பரமகுரு, கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகினார். ஊரடங்கு என்பதால் நீதிமன்றங்களுக்கு செல்லாத பரமகுரு, ஊராட்சி மன்ற பணிகளை செய்து வந்தார். அமைதியானவர், அன்பானவர் என ஊர்மக்களால் கூறப்படும் பரமகுரு, நேற்று மாலை 5 மணியளவில் கால்வாய் பணிகளை பார்வையிட வந்தார்.


அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், பரமகுருவை சுற்றி வளைத்து வெட்டி கொடூரமாக கொலை செய்தது. பின்னர் பைக்கில் தப்பிச் சென்ற கொலையாளிகள், கத்தியை சாலையில் உரசியபடி தீப்பொறி பறக்க பறக்க பந்தா காட்டிவிட்டு சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு பொதுமக்கள் கண்முன்னால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட திருநின்றவூர் போலீசார், சடலத்தைக் கைப்பற்றினர்.


இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் கொலை குறித்து திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் பகையே காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கொலை நடந்த இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கொசவன்பாளைய ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த பரமகுரு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் ஊராட்சி மன்ற பணிகளை கவனித்து வந்துள்ளார். துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியுள்ளது. அதன்காரணமாக பரமகுரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம். இருப்பினும் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் கொலையாளிகள் 4 பேர் பைக்கில் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. மணல் கடத்தலை பரமகுரு தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்ததாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்து வருகிறது” என்றார்.


பரமகுரு, பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அந்தச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், பரமகுரு, ரொம்பவே அமைதியான மனிதர். அடாவடியாக கூட பேசமாட்டார். திருவள்ளூர், அம்பத்தூர், பூந்தமல்லி நீதிமன்றங்களுக்கு சிம்பிளாகத்தான் வருவார். சின்ன வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்வானது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதுவே அவரின் உயிரைப்பறிக்க காரணமாகிவிட்டதே என்றனர்.


பரமகுரு கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பூந்தமல்லி தொகுதியின் தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி மற்றும் தி.மு.க வினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பரமகுருவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணசாமி, காவல் துறையினரிடம் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தார்.


திருநின்றவூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *