சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதியை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலகட்டத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் சாத்தான்குளம் போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த போலீஸ் நிலையம் வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
புதிய எஸ்.பி. பதவியேற்பு
டிஎஸ்பியும், ஏடிஎஸ்பியும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் பணியாற்றிய ஜெயகுமார் தூத்துக்குடி எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இன்று தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியபோது, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவோம். சட்டம், ஒழுங்கு, விபத்து தடுப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்து கொண்டார். இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்பலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
யார் இவர்?
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக ஜெயகுமார் பணியாற்றிய காலகட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளை திறமையாக துப்புதுலக்கியவர். மேலும் கொரோனா நோயாளி விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய வழக்கிலும் அந்த நோயாளியை சல்லடை போட்டு தேடி கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்.
சென்னையில் பணியாற்றியபோது, ரவுடிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். போலீஸாருக்கு நீண்ட காலமாக போக்கு காட்டி வந்த பிரபல ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தவர். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய காலக்கட்டத்தில் மிகவும் திறமையாக செயல்பட்டார். குட்கா வழக்கில் தைரியமாகி ஆஜராகி தகவல்களை தெரிவித்தவர். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். அதனால்தான் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஐபிஎஸ் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்காமல் டிபிஎஸ் சர்வீஸில் உள்ள ஜெயகுமாரை நியமித்துள்ளனர்.