‘தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தார்’ எஸ்.பி.யிடம் ஆசிரியை புகார்

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை வயிற்றில் எட்டி உதைத்தார் என்று அந்த மாவட்ட எஸ்.பி.யிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மீண்டும் பரபரப்பு


சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கோரியும், சில இரக்கமற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்ரீசாந்தி, அந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் சனிக்கிழமை அளித்த புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்குள் கொண்டு போய் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார். வலியால் அழுதபோது காலால் என் வயிற்றில் பலமுறை எட்டி எதைத்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.

ஆசிரியை சாந்தி

அண்ணன் மர்ம மரணம்


நான் தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்தன்பேரில் சென்றார்.

ஆனால் காலையில் அவர் விபத்தில் இறந்ததாக தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு நின்ற போலீசார், என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டதாக கூறினர். நாஙக்ள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை. என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கால் இடித்து அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.

எட்டி உதைத்தார்


நாங்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறை அனைத்து உயரதிகாரிகளுக்கும் உள்துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்து இருக்கிறோம். இந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று கூறிய காவலர் ஒருவர் என்னை செல்போனில் தொடர்பு கோண்டார்.


அதன்பேரில் கடந்த ஜூன் 1-ம் தேதி காலை 11 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சென்றேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர், புகார்களை வாபஸ் வாங்கும்படி கூறினார். நான் மறுத்ததால் அவர் எனது தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்குள் கொண்டு போய் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார். வலியால் அழுதபோது காலால் என் வயிற்றில் பலமுறை எட்டி எதைத்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.

மிருகத்தனம்

அதன்பின் பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில் இரவு 8 மணியளவில் ஆஜர்படுத்தினர். அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தினர். குடிக்க தண்ணீர், பசிக்கு சாப்பாடு தரவில்லை. அதன் பிறகு எனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

பெண் என்று பாராமல் என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு டவுன் டிஎஸ்பி கணேசனுக்கு, எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *