வரும் 22-ம் தேதிக்குப் பிறகு டிக்டாக் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இமயமலையின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் இருநாடுகளும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்தன. இதன் தொடர்ச்சியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன்பின் எல்லையில் இருந்து சீன ராணுவ வீரர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கினர்.
தடையை நீக்க வேண்டும், இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்று டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளின் நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆய்வு செய்து வருகிறது.
சுமார் 70 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சீன செயலிகளின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த பதில்களை ஆய்வு செய்த பிறகு சீன செயலிகள் மீதான தடை நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் அடிப்படையில் வரும் 22-ம் தேதிக்குப் பிறகு டிக்டாக் மீண்டும் பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.