திருவள்ளூர் மாவட்டத்தில் நாய் பண்ணையில் வேலைப்பார்த்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு அவரின் சடலம் அங்கேயே புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சீனிவாசனின் மனைவி பிரியங்கா (வயது 35). கருத்து வேறுபாடுகாரணமாக சீனிவாசனும் பிரியங்காவும் பிரிந்து வாழ்கின்றனர்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த பிரியங்கா, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி கிராமத்தில் உள்ள நாய்பண்ணையில் வசித்துவந்தார்.
பண்ணையில் உள்ள நாய்களை அவர் கவனித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மாயமானார். இந்தத் தகவல் தெலுங்கானா மாநிலத்திலிருக்கும் பிரியங்காவின் சகோதரர் விக்ரம் என்பவருக்கு தெரியவந்தது.
உடனே அவர், ஆன்லைனில் பாதிரிவேடு காவல் நிலையத்தில் பிரியங்காவைக் காணவில்லை என்று புகாரளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் பாதிரிவேடு போலீஸார் நாய்பண்ணைக்குச் சென்று விசாரித்தனர்.
அப்போது நாய் பண்ணையில் யாரும் இல்லை. பிரியங்கா குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கொலை
போலீஸார் நடத்திய விசாரணையில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு நாய் பண்ணையிலேயே புதைக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் போலீஸார் நாய் பண்ணைக்கு நேற்றிரவு சென்றனர்.
போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடம் குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக சடலத்தை தோண்டியெடுக்க போலீஸார் முடிவு செய்தனர்.
உடனடியாக இதுகுறித்து தாசில்தார் கதிர்வேலுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தாசில்தார் கதிர்வேல் மற்றும் வருவாய் துறையினர் வந்தனர்.
நேற்றிரவு ஜேசிபி மூலம் நாய் பண்ணையில் பிரியங்கா புதைக்கப்பட்ட இடத்தை போலீஸார் தோண்டினர். அப்போது அழுகிய நிலையில் பிரியங்காவின் சடலம் காணப்பட்டது.
அதனால் அந்தப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பிரியங்காவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு பிரியங்காவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பிரியங்காவை கொலை செய்து நாய்பண்ணையில் புதைத்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாய்பண்ணையை சென்னை மாதவரத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்தால்தான் பிரியங்கா கொலைக்கான காரணம் தெரியவரும்.
இதற்கிடையில் நாய் பண்ணையில் போலீஸார் சோதனை செய்தபோது அங்குள்ள கிணற்றில் கறுப்பு நிற பிளாஸ்டிக் பைகள் மிதந்தன. உடனடியாக அவைகளை போலீஸார் வெளியில் எடுத்து பிரித்து பார்த்தனர்.
பிளாஸ்டிக் பைகளுக்குள் சிறிய பொட்டலங்கள் இருந்தன. அது என்னவென்று தெரியவில்லை. அதை கைப்பற்றிய போலீஸார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளில் போதை பொருள் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
பிரியங்கா கொலை செய்யப்பட்ட பண்ணையில் கறுப்பு நிற பிஸாடிக் பைகள் கிணற்றில் மிதந்தவுடன் அதுவும் சடலங்களாக இருக்குமோ என்ற சந்தேக ரேகை போலீஸாருக்கு முதலில் எழுந்தது. ஆனால் அவை சடலங்கள் இல்லை பவுடர் என்று தெரிந்ததும் போலீஸார் நிம்மதியடைந்தனர்.
இருப்பினும் நாய்பண்ணையில் கிடைத்தது போதை பொருளா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. பிரியங்கா குறித்த முழுவிவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
அதில் அவருக்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் நட்பு இருந்ததாகவும் அதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.
அதனால் நாய்பண்ணையில் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்கள் அந்தப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.