தமிழக அமைச்சரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அண்மையில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்காரணமாக சென்னையில் புதிய வைரஸ் தொற்று கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
எனவே தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதா அல்லது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பருக்கும் கல்லூரி செமஸ்டர் தேர்வை நடத்த முடியாது என்று மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளிகளை எப்போது திறப்பது, தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவது என்பன குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட உள்ளது.
மிக முக்கியமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.