ஜெ.எம்.பஷீரை `தேவரய்யா’ என அழைக்கும் துணை முதல்வர்

தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீரை `தேவரய்யா’ என்றே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அன்போடு அழைத்து வருகிறார்.

அதனால் படக்குழுவினரும் நடிகர் ஜெ.எம்.பஷீரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேசிய தலைவர்

தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். ஏ.எம்.சௌத்ரி தேவர் தயாரிப்பில் ‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். 

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதையொட்டி 48 நாட்கள் விரதம் இருந்து நடித்து வருகிறார் நடிகர் ஜெ.எம். பஷீர்.

தமிழக துணை முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெ.எம்.பஷீரின் உருவ ஒற்றுமையை பார்த்து பாராட்டியிருக்கிறார். அதன்பிறகு ஜெ எம் பஷீரை ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் போது “தேவரய்யா” என்று அன்போடு அழைக்கிறார். அதனால் ஜெ.எம்.பஷீர் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

நடிகர் ஜெ.எம்.பஷீர்

உங்களுக்குள் தேவர் இருக்கிறார்

சமீபத்தில் சென்னையில் உள்ள கந்த தோட்டம் கந்தசாமி முருகன் கோயிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் ஜெ எம் பஷீரும் சென்றுள்ளார். சூரஸம்ஹாரம் என்பதால் முருகரை வணங்கி விட்டு ஓ.பன்னீர்செல்வமும் ஜெ.எம்.பஷீரும் வெளியில் வந்துள்ளனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், “பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடிக்கும் உங்களிடம் தேவர் போல உருவ ஒற்றுமை  உள்ளது. உங்களுக்குள் தேவர் இருக்கிறார். பழைய பஷீர் தோற்றம் மறைந்து தற்போது தேவரின் தோற்றம் தெரிகிறது. உங்களுக்கு நிச்சயமாக பெரும் புகழ் கிடைக்கும்” என நடிகர் ஜெ.எம்.பஷீருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

muthuramalingam
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தோற்றத்தில் ஜெ.எம்.பஷீர்

தேவரய்யா

“தேவர் ஐயா  முருகனின் தீவிர பக்தர். தங்களுடன் இணைந்து முருகனை வழிபட்டது தேவர் ஐயாவின் அற்புதம். என்னால் இந்த நாளை மறக்க முடியாது” என ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெ.எம். பஷீர் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதிமுக வட்டாரத்திலும் தேசிய தலைவர் படக்குழுவிலும் நடிகர் ஜெ.எம்.பஷீரை அனைவரும் தேவரய்யா என்றே அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்தப் படத்தை சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது.

இதுகுறித்து நடிகர் ஜெ.எம்.பஷீர் கூறுகையில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் சந்திக்கும்போதெல்லாம் தேவரய்யா என்று அழைப்பது பாக்கியமாக இருக்கிறது. இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் என்னை பெயர் சொல்லி அழைப்பார். தற்போது

தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால்தான் அவ்வாறு என்னை அழைக்கிறார். துணை முதல்வரே இப்படி அழைப்பதே இந்தப் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. நிச்சயம் இந்தப்படம் மெகா ஹிட்டாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *