வடகிழக்குப் பருவமழை தொடர்பாக சமூ வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை நிவாரண பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“வடகிழக்குப் பருவமழை தொடர்பாக வருவாய் துறை 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று அமைச்சர் உதயகுமார் எச்சரித்தார்.