ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அவரச சட்டத்தை பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே ரம்மி  உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு அண்மையில்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்  கூறும்போது‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பு அளித்த பதிலில் ‘‘சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். விரைவில் சட்டம் இயற்றப்படும்’ என்று உறுதி அளித்தது.

இந்த பின்னணியில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அரசு சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தடையை மீறி ஆன்லைன் சூதாட்டம் விளையோடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவன பொறுப்பாளர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *