மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 16.3 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 43 ஆயிரத்து 318 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 747 ஆக உயர்ந்திருக்கிறது.
வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 147 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 4 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இதில் 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 729 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் புதிதாக ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மிக அதிகபட்சமாக ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் முதல்முறையாக நேற்று புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்து தாண்டியது. மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இரு மாநிலங்களிலும் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச அளவிலான வைரஸ் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதேபோல விர்ரென்று கொரோனா தொற்று உயர்ந்தால் விரைவில் 2-வது இடத்தை எட்டிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.