ஏறுது, எகிறுது கொரோனா.. ஒரே நாளில் 57,000 பேரை அப்பியது.. 17 லட்சத்தை தொட்டு நிற்கிறது தொற்று

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட கொரோனா புள்ளிவிவரத்தில், “நாடு முழுவதும் ஒரே நாளில் 57 ஆயிரத்து 117 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார தொடக்கத்தில் 50 ஆயிரத்துக்குள் நின்ற கொரோனா, வார இறுதியில் 50 ஆயிரத்தை எம்பி குதித்தது.


இந்த வாரத்தில் முதல் நாளான இன்று புதிய வைரஸ் தொற்று 57 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியளித்தது. கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று சோதனைக்காக சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று சோதனைக்காக சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளனர்.


மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் நோயாளிகளுக்கு அனுமதிக்க படுக்கை வசதி இல்லை என்ற புகார்கள் பரவலாக எழுந்துள்ளன. சிறு நகரங்களிலும் கூட இந்த அவலம் காணப்படுகிறது.


நாடு முழுவதும் இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 511 ஆக உயர்ந்திருக்கிறது.

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் டாக்டர்களும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.
ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் டாக்டர்களும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.


வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிராவில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அந்த மாநிலத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகம் இரண்டாவது இடத்தை விட்டு இறங்க மறுக்கிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் இருந்தாலும் அந்த யூனியன் பிரதேசத்தில் புதிய வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 500 முதல் ஆயிரம் பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அங்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

காஷ்மீரின் ஜம்முவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் பங்கேற்றோர்.
காஷ்மீரின் ஜம்முவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் பங்கேற்றோர்.


ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, பிஹாரின் நிலைமை கவலையளிக்கிறது. ஒரு காலத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியதற்காக போற்றி புகழப்பட்ட கேரளாவில் இன்று புதிய தொற்று சர்ரென்று உயர்ந்து வருகிறது. அங்கு நேற்று ஆயிரத்து 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி அளித்தது.


எங்கே செல்லும் இந்த பாதை என்ற பாடல் வரிக்கு ஏற்ப கொரோனா பாதிப்பு இந்தியர்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *