ஜெய் ஸ்ரீராம்.. பக்தி பரவசத்தில் திளைக்கிறது அயோத்தி.. ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி கோயில் கட்டுமானத்துக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமர் கோயிலின் 3டி மாதிரி வடிவம்
ராமர் கோயிலின் 3டி மாதிரி வடிவம்

சோமநாதர் கோயில் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 131-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கோயில்களை இந்த குடும்பத்தினர் கட்டி எழுப்பியுள்ளனர்.
தற்போது சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா (77) தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

சந்திரகாந்த் சோம்புராவின் 2 மகன்கள் நிகில், ஆசிஷ் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஆசிஷ் சோம்புரா கோயில் கட்டுமானத்தை விரிவான விளக்கினார்.
“சோமநாதர் கோயிலை எனது தாத்தா பிரபாசங்கர் கட்டினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை சந்திரகாந்த் சோம்புரா அயோத்தி ராமர் கோயிலுக்கான மாதிரியை உருவாக்கினார். அப்போது 2 மாடிகள், 212 தூண்களுடன் 141 அடி உயரத்தில் கோயிலை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இப்போது கோயில் வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது.

அயோத்தி கங்கை நதிக்கரையில் பூஜை நடத்தும் பக்தர்கள்.
அயோத்தி கங்கை நதிக்கரையில் பூஜை நடத்தும் பக்தர்கள்.

வடமாநிலத்தில் நாகரா கோயில் கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும்.
முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும்.

கருவறை, எண் கோண வடிவில் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தலைமை ஏற்றிருக்கும் சந்திரகாந்த் சோம்புரா கூறும்போது, வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி ராமர் கோயில் கட்டப்படும்” என்றார்.


அயோத்தி ராமர் கோயிலின் 3டி மாதிரியை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட ராமர் கோயிலை சுற்றி 4 சிறிய கோயில்களும் கட்டப்பட உள்ளன. சுமார் 3 முதல் மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜைக்காக தயாராகும் மண்டபம்.


பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11.30 மணிக்கு அயோத்தியில் தரையிறங்குகிறார். முதலில் அனுமன் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். பிற்பகலில் பூமி பூஜை மண்டபத்துக்கு செல்கிறார். சுமார் 2 மணி நேரம் பூமி பூஜையில் பங்கேற்பார்.

12.40 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அயோத்தியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு லக்னோ விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அயோத்தி நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணை பிளக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *