அரசு அதிகாரிகள் இப்படி செய்யலாமா? போக்குவரத்து தலைமைச் செயலாளருக்கு சென்ற கடிதம்

போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவது மற்றும் இயக்கத்தை நிறுத்துவது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்துடன் நோய் தொற்று பரவாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களும் தெளிவுபடுத்தப்பட்டன.

போக்குவரத்து கழக ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியகூடிய ஊழியர்களுக்கு எவ்வாறு வருகைப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வை ஒட்டி நிறுவனங்கள் செயல்படும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதல்களையோ அரசாணைகளையோ கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமே அரசு உத்தரவுகளையும் அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணிப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

முதல்வர்

மேலும் நோய் தொற்று பரவலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயலாகும். எனவே தாங்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் கொரோனா நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அரசு உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


முதல்வரின் செய்தி வெளியீட்டின்படி பேருந்துகள் இயக்கப்படும்போது 60 விழுக்காடு இருக்கைகளில் மடடும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என வழிகாட்டப்பட்டது. ஆனால் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் தொழிலாளர்களிடம் கூடுதல் வருவாய் கொண்டு வர வேண்டுமென நிர்பந்தித்தன. மேலும் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்ற எந்த நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவில்லை.

சம்பளம்

இதன்காரணமாக பொதுப் போக்குவரத்து நோய்தொற்றுக்கு காரணமாக அமைந்துவிட்டது என மீண்டும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை உருவானதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கை மிக முக்கியமான காரணமாகும்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணையில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருகைப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் அரசாணைக்கு புறம்பாக நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டதால் பல தொழிலாளர்கள் சம்பள இழப்புக்கு உள்ளாக்கப்பட்டதுடன் தொழிலாளர்களின் விடுப்பை கழித்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

நிர்பந்தம்

இதை சரி செய்து அரசாணை அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்குவது ஜூலை 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களும் அலுவலக பணியாளர்களும் பணிக்கு வரவேண்டுமென நிர்பந்தம் செய்யப்படுகிறது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் அலுவலக பணியாளர்களுக்கும் எவ்வித பணியும் இல்லை.


போக்குவரத்து வசதியற்ற நிலையில் பணியாளர்கள் பணிக்கு வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாமல் தொழிலாளர்கள் பணிமனைக்கு வரவேண்டுமென நிர்பந்திக்கப்படுகின்றனர்.
55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணை நோய்கள் உள்ளவர்கள் பணிபுரிவதில் இருந்து விலக்களிப்பட வேண்டும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

55 வயதுக்குமேல்..

ஆனால் இணை நோய் உள்ளவர்களும் 55 வயதிற்கு மேற்பட்டவர்களும் பணிக்கு வர வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஊனமுற்றோர்களுக்கு பணிபுரிவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களும் வேலைக்கு வர நிர்பந்திக்கப்படுகின்றனர்.
தொழிலாளர்களது குடும்பத்தில் நோய்தொற்று ஏற்பட்டிருந்தாலும் மற்றும் நோய் தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் தொழிலாளர்களும் பணிக்கு அனுமதிக்ககூடாது என்று அரசாணையில் தெளிவுப்படுத்தப்பட்டும் அப்படிப்பட்ட தொழிலாளர்களும் பணிக்கு வர வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

தற்காப்பு நடவடிக்கை


தொழில் நிறுவனங்களில் பணியாளர்கள் அனுமதிக்கப்படும்போது என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்குக் கழக பணிமனை என்பது தொழில் நிறுவனம் அல்ல.

அரசாணையில் குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் கடைபிடிக்க முடியாத பணி தான் தொழில்நுட்ப பணியாகும். தகுந்த இடைவெளியுடன் வேலை பார்ப்பதோ முகக்கவசம் அணிந்து வேலைப்பார்ப்பதோ கையுறையுடன் வேலைப்பார்ப்பதோ சாத்தியமற்றது. அடிக்கடி கைகளை கழுவுவது நடைமுறை சாத்தியம் இல்லாதது. அப்படிப்பட்ட பணியில் எவ்வித அவசியமற்ற முறையில் தொழிலாளர்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் பணிக்கு வர நிர்ப்பந்திக்கிறது.

கொரோனா வைரஸ்

பணியாளர்களை வேலைக்கு வரவழைத்துள்ள நிர்வாகம் குறைந்தபட்சம் அரசாணையில் குறிப்பிட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
நிர்வாகத்தின் அவசர தேவைக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்து பணிபுரிய வைப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் தேவையற்ற முறையில் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் செயல்படுவதால் கொரோனா நோய் பரவலை தடுக்கும் அரசின் நோக்கம் முற்றிலும் சீர்குலைக்கப்படுகிறது.

கடந்த 4 நாள்களில் மதுரை ஈரோடு வேலூர் மண்டலங்களில் 5 தொழில்நுட்ப தொழிலாளர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்வரை பிற தொழிலாளர்களோடு சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தொழிற்சங்கங்கள் கடிதம்


எனவே மேலே கூறியுள்ள பிரச்னைகளின்பால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் அரசு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


இந்த கடிதத்தில் தொமுச, சிஐடியூ ஏஐடியூசி ஐஎன்டியூசி எச்எம்எஸ் டிடிஎஸ்எப் எம்எல்எப் ஏஏஎல்எல்எப், டிடபில்யூயு ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *