திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி என்ற விவசாயியின் 14 வயது மகள் கங்காதேவி. இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள குப்பைகளை ஆள்நடமாட்டம் இல்லாத கருவேல முள் காட்டுக்குள் கொட்ட சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சிறுமியை பல இடங்களில் தேடினர். அப்போது முள்புதரில் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக சிறுமியின் சடலம் கிடந்தது.
11 தனிப்படைகள்
அவளின் மரணம் குறித்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் இரவு பகல் பாராமல் சிறுமியின் மரண வழக்கை விசாரித்தனர். ஆரம்பத்திலிருந்தே சிறுமியின் உறவினர்கள் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தது.
மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிந்தது. சிறுமி வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் உறவினர் செந்தில் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறுமியுடன் சண்டை
இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீசார் கூறுகையில், கைதாகியுள்ள செந்தில், டைல்ஸ் வேலைப்பார்த்து வருகிறார். சிறுமிக்கு உறவினரான செந்திலுக்கும் சிறுமிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று காலை சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை.
அப்போது அங்கு சென்ற செந்தில், சிறுமியிடம் பேசியுள்ளார். செந்தில் வீட்டுக்கு சென்ற நேரத்தில் சிறுமி செல்போனில் நீண்ட நேரம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
அதைக் கவனித்த செந்தில், நீ யாரிடம் இவ்வளவு நேரம் போனில் பேசினாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி, நான் யாரிடம் பேசினால் உனக்கென்ன என்று கேள்வி கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து செந்தில் சென்றுவிட்டார்.
அடித்தேன்..ஆனால்…
இதையடுத்து மதியம் தனியாக சிறுமி காட்டுப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போதும் செந்திலை சிறுமி சந்தித்துள்ளார். அதன்பிறகுதான் அவர் உயிரிழந்துள்ளார். செந்திலிடம் விசாரித்தபோது காட்டுப்பகுதியில் சிறுமியை சந்தித்த போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது அவளை நான் அடித்தேன். அதன்பிறகு நான் சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் சிறுமி உயிரிழந்தது எப்படி, தீயில் கருகியது என்ற கேள்வியை செந்திலிடம் கேட்டதற்கு நான் அவளை எரிக்கவில்லை, கொலையும் செய்யவில்லை என்று சத்தியம் செய்துள்ளார்.
இதையடுத்து செந்தில் கூறியது போல சம்பவத்தன்று சிறுமி யாருடன் நீண்ட நேரம் பேசினாள் என்று அவளின் ஹால் கிஸ்ட்ரியை எடுத்து பார்த்தோம். அப்போது வினோத் என்ற பெயரில் உள்ள நம்பருக்கு அவள் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அதனால் வினோத் யார் என்று விசாரித்து வருகிறோம். வினோத்திடம் விசாரித்தால் சிறுமியின் மரணத்துக்கான காரணம் என்றனர்.
ஆனிவிஜயா கூறுகையில், செந்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடந்துவருகிறது. செந்தில் கூறியது போல சிறுமி போனில் பேசியவரிடம் விசாரித்துவருகிறோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை சும்மா விடமாட்டோம் என்றார்.
திருச்சி சிறுமி வழக்கு அடுத்தடுத்த திருப்பங்களையும் மர்மங்களையும் கொண்டதாகவே உள்ளன.