திருச்சி சிறுமியை கொலை செய்தது யார்? – முதலில் பார்த்த 2 பேரிடம் கிடுக்குப்பிடி

திருச்சி மாவட்டம் சோமசரம்பேட்டை அருகே 14 வயது சிறுமி நேற்று எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.


திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மனைவி மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் மகள் கங்காதேவி (14) 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கங்காதேவி, வீட்டிலேயே இருந்தார். தன்னுடைய தோழிகளுடன் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.

உயிரிழந்த சிறுமி கங்காதேவி


அப்போது இயற்கை உபாதை மற்றும் குப்பைகளைக் கொட்ட காட்டுபகுதிக்குச் சென்ற கங்காதேவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை. அதனால் கங்காதேவியைத் தேடி அவரின் அம்மா மகேஸ்வரி கருவேல மரங்கள் அதிகமாக இருக்கும் காட்டுப்பகுதிக்குச் சென்றார். அப்போது அடர்ந்த கருவேல மரங்களுக்கு நடுவில் முகம், உடல் பாதி எரிந்த நிலையில் கங்காதேவி கருகிய நிலையில் கிடப்பதாக சிலர் கூறினர்.


அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பெரியசாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்தத் தகவல் காட்டு தீ போல பரவியது. உடனே சிறுமி இறந்து கிடந்த காட்டுப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் மோப்ப நாயுடன் வந்தனர். சிறுமியின் சடலம் கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிய மேப்பநாய் படுத்துக்கொண்டது.


அதனால் கொள்ளையர்கள் மோப்பநாய் படுத்திருந்த இடத்திலிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதற்காக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

இதற்கிடையில் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அதை போலீஸ் டீம் தடுத்தது. இந்தச் சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மக்கள்.


சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியாவுல் ஹக், டி.எஸ்.பி கோகிலா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் அமைதியாகினர்.

இதையடுத்து சிறுமியின் சடலம், ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமி கொலை குறித்து சோமசரம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஎஸ்பி கோகிலா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.


திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கூறுகையில், சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


திருச்சி மாவட்ட போலீசார் கூறுகையில், சிறுமி உயிரிழந்த காட்டுப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால், நேற்று அந்தப்பகுதிக்கு யாரெல்லாம் சென்றார்கள் என முதலில் விசாரித்துவருகிறோம். இதற்கிடையில் சிசிடிவி கேமரா மூலம் அவ்வழியாக சென்ற வாகனங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதுதவிர சிறுமி பிற்பகலிருந்து மாயமாகியுள்ளார்.

அதனால், அந்தச் சமயத்தில் சம்பவம் நடந்த இடத்திலிருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்துவருகிறோம். அதில் 10க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம்.
சிறுமி, கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தை 2 பேர் முதலில் பார்த்துள்ளனர். அவர்களிடம் விசாரித்து வருகிறோம். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்.

சிறுமியின் கொலை குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் தெரியவரும். மேலும், சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது காலி மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்தன.


ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த இடத்துக்குதான் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் இயற்கை உபாதைக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கும் பயன்படுத்திவந்துள்ளனர். வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறுமி 3 மணி நேரத்துக்குள் இந்தக் கொடூரம் நடந்துள்ளது என்றனர்.


சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஒருவரை மாமா அழைப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்தக் கொடூர சுவடு மறைவதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையில் புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய விஜய் ரசிகர் மன்றத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி சிறுமிகளின் கொடூரக் கொலை சம்பவங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *