மத்திய பிரதேசம் பேடல் மாவட்டம், கோதாடோங்கி அருகேயுள்ள கேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவர் மாநில தலைநகர் போபாலில் தங்கியிருந்தார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
அதேநேரம் சந்தீப்பின் பெற்றோருக்கு அவருக்கு வேறொரு பெண்ணை பேசி முடித்தனர். சந்தீப்பால் தனது காதலியையும் கைவிட முடியவில்லை. பெற்றோர் சொல்லையும் தட்ட முடியவில்லை.
இந்த பிரச்சினை பஞ்சாயத்துக்கு சென்றது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் 2 பெண்களின் குடும்பத்தினர் மற்றும் சந்தீப் குடும்பத்தை அழைத்துப் பேசினர். இதில் சமூக உடன்பாடு எட்டப்பட்டது. 2 பெண்களும் சந்தீப்பை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கேரியா கிராமத்தில் அண்மையில் திருமண விழா நடைபெற்றது. இதில் மணமகன் சந்தீப், ஒரே நேரத்தில் 2 பெண்களையும் திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை பார்த்த உள்ளூர் தாசில்தார் மோனிகா இந்த திருமணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். சட்டபூர்வமாக இந்த திருமணம் செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.