உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம்

உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம் வழங்கியுள்ளது.

உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா, அண்டை நாடான மியான்மரின் சாகாயிங் பகுதியில் தீவிரவாத முகாம் அமைத்து செயல்பட்டு வந்தார். அசாமை தனி நாடாக்க வேண்டும் என்று அவர் நீண்டகாலமாக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டில் மியான்மர் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாத குழுக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

இதில் உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பின் முகாம்களையும் மியான்மர் ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு சீனா புகலிடம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செயல்படும் சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 “உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு சீனாவின் யுனான் மாகாணம், ரூய்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகிறது. 

சீனாவில் உள்ள முகாமில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு சீன அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது. 

அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் இணைந்து காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கும் சீனா ஆயுதங்களை விநியோகம் செய்வதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *