சாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரட்டை கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
தந்தை, மகன் உயிரிழப்பு
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலக அமைதி, பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐ.நா. சபையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உட்பட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச விவகாரங்கள் அனைத்தும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் (வயது 59), பென்னிக்ஸ் (வயது 31) ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். தந்தை, மகனான அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர்.
முழுமையான விசாரணை
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான சினிமா நட்சத்திரங்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையை கடுமையாக கண்டித்தனர். பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஐ.நா. சபையும் சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக், நியூயார்க் நகரில் கூறுகையில், “தூத்துக்குடி சம்பவம் கவலையளிக்கிறது, கண்டனத்துக்குரியது. சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.