இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் (ஐடி) ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையே நம்பி உள்ளன.
பொருளாதார வீழ்ச்சி
அந்த நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதால் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது கடினமாகி உள்ளது. இதன்தொடர்ச்சியாக ஐடி துறையில் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமையிடமாக பெங்களூரு விளங்குகிறது.
சில நாட்களில் 3,500 பேர்
அந்த மாநிலத்தை சேர்ந்த ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்க செயலாளர் சுராஜ் கூறுகையில், “ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம். நிலைமை விரைவில் சீராகும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன.
ஆனால் சிறு, நடுத்தர ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் பெங்களூரு ஐடி நிறுவனங்களில் இருந்து 3,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஐடி வட்டாரம் மறுப்பு
இதுகுறித்து ஐடி நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், “பணித்திறமையின் அடிப்படையில் மட்டுமே ஐடி துறை செயல்படுகிறது. அந்த வகையில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை அரசியலாக்கக்கூடாது” என்று தெரிவித்தன.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் ஐடி துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கவலையளிக்கிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.