வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
“வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
10-ம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி), 12-ம் வகுப்பு, பட்டய படிப்பு, பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகைக்காக சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அங்கு விண்ணப்ப படிவங்களைப் பெற்று முறைப்படி விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
40 வயதுக்கு உட்பட்டராகவும் ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழியை உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.