கடன் தவணை, வட்டி செலுத்தியவர்களுக்கு சலுகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்பின் 4 கட்டங்களாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
ஜூன் 1-ம் தேதி முதல் ஊரங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பல நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு கடன் தவணை செலுத்த ரிசர்வ் வங்கி தரப்பில் 6 மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த 6 மாத காலத்தில் அரசு, தனியார் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இதன்காரணமாக வங்கிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காலத்தில் கடன் தவணை, வட்டியை முறையாக செலுத்தியவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கேஷ்-பேக் வகையில் சலுகை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.