கிராம மக்களுக்கு சொத்துவிவர அட்டை வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
கிராமப்புற மக்களில் பலருக்கு வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் இருந்தபோதிலும் அவற்றுக்கான பட்டா போன்ற சட்டபூர்வ ஆவணங்கள் இல்லை.
இதன்காரணமாக சொத்துகளின் பெயரில் அவர்களால் வங்கிக் கடன் பெற முடியவில்லை. நிலத்தகராறுகளின்போது அவர்கள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஸ்வமிட்வா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 11-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதன்படி கிராம மக்களுக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும். முதல்கட்டமாக உத்தர பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா ஆகிய 6 மநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் அனைவருக்கும் சொத்து விவர அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.