கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரயில்வே இணையமைச்சர் காலமானார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி நேற்று காலமானார்.

கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுரேஷ் அங்காடி (65). கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே இணையமைச்சராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகாவில் பாஜக வளர கடுமையாக உழைத்தவர் சுரேஷ் அங்காடி.

அர்ப்பணிப்பு உணர்வுள்ள எம்பி. மிக திறமையான அமைச்சர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சுரேஷ் அங்காடி தன்னை சந்தித்த புகைப்படத்தையும் பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *