மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு சிறுநீரக பிரச்சினையும் ஏற்பட்டது. 

கொரோனா ஊரடங்கின்போது நாடு முழுவதும் பொது விநியோகம் பாதிக்கப்படாத வகையில் அயராது பணியாற்றினார்.

மேலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதிலும் தீவிரம் காட்டினார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அவருக்கு 2-வது முறையாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 

இந்த தகவலை அவரது மகனும் லோக் ஜன சக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா இன்று நீங்கள் உலகத்தில் உயிரோடு இல்லை. 

எனினும் நீங்கள் எப்போதும் என்னோடு இருக்கிறீர்கள். உங்களை இழந்து வாடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் குடும்பம்  

மறைந்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், 2 முறை திருமணம் செய்தார். அவரது முதல் மனைவி ராஜ்குமார் தேவி மூலம் உஷா, ஆஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 

அவர்கள் பிஹாரில் ககாரியா மாவட்டம், சாஹர்பானியில் உள்ள கிராமத்தில் வசிக்கின்றனர்.

கடந்த 1983-ம் ஆண்டில் விமானப் பணிப்பெண் ரீனா என்பவரை பாஸ்வான் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.  

2-வது மனைவி மூலம் சிராக் பாஸ்வான் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவராக சிராக் பாஸ்வான் பதவியேற்றார். 

வரும் 28-ம் தேதி தொடங்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள சிராக் பாஸ்வான், பாஜக கூட்டணியை தவிர்த்து தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார். 

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு பிஹார் அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை வரலாறு

பிஹாரின் ககாரியா மாவட்டத்தில் கடந்த 1946 ஜூலை 5-ம் தேதி ராம்விலாஸ்  பிறந்தார். கோஸி கல்லூரியில் எம்.பி. முடித்த அவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். இதன்பின் பிஹார் காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றினார்.

இதன்பின் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் கடந்த 1969-ம் ஆண்டில் பிஹார் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நெருக்கடி நிலையின்போது மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றார். 

நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா தளத்தில் இணைந்த அவர் 1977 மக்களவைத் தேர்தலில் பிஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதன்பின் 1980, 1984 ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

கடந்த 1983-ம் ஆண்டில் தலித் சேனா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார். 

கடந்த 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் எம்.பி.யானார்.  மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

கடந்த 1996 தேர்தலில் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றினார். 

அதன்பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை, நிலக்கரித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த 2000-ம் ஆண்டில் ஜனதா தளத்தில் இருந்து தனியாகப் பிரிந்த ராம்விலாஸ் பாஸ்வான், லோக் ஜன கச்தி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  

கடந்த 2002 குஜராத் கலவரத்தின்போது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகினார்.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ரசாயனம், உரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் தோல்வியைத் தழுவினார். அதன்பின் 2010-ம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடந்த 2014-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய ஆட்சி தொடங்கி இப்போது வரை மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர்  நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *