அன்லாக் 3.0 வெளியீடு.. பள்ளி, மெட்ரோ, தியேட்டருக்கு ‘நோ’.. யோகா, ஜிம்முக்கு ‘யெஸ்’…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன் பிறகு கடந்த மே 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்பின் கடந்த ஜூன் முதல் ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஜூனில் ‘அன்லாக் 1’, ஜூலையில் ‘அன்லாக் 2.0’ வழிகாட்டு நெறிகள் வெளியாகின. ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அன்லாக் 3.0’ வழிகாட்டு நெறிகள் இன்றிரவு வெளியிடப்பட்டன. இதில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அன்லாக் 3.0 வழிகாட்டு நெறிகள் வருமாறு:ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி செயல்படலாம்.

எனினும் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழாக்களை நடத்தலாம். சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுகிறது. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும்.


வந்தே பாரத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை இயக்கப்படும். மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து எவ்வித தடையும் இல்லை. இதற்காக தனியாக இ-பாஸ் உள்ளிட்ட அனுமதி பெற தேவையில்லை.


பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் சென்டர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படாது. திரையரங்கு, நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, மதுபான பார்கள், அரங்கங்களை திறக்க அனுமதி இல்லை. சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார, மதவழிபாடு, பெருந்திரளாக கூடுவதற்கு அனுமதி இல்லை.
அந்தந்த மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *