கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி அமல் செய்யப்பட்ட ஊரடங்கு 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இதன்பின் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜூனில் ‘அன்லாக் 1’, ஜூலையில் ‘அன்லாக் 2.0’ வழிகாட்டு நெறிகள் வெளியாகின.

வரும் ஆகஸ்டில் ‘அன்லாக் 3.0’ வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும் தியேட்டரின் மொத்த இருக்கைகளில் 25 சதவீதத்தை மட்டுமே நிரப்ப அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதை ஏற்க மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதிக்குமாறு கோரி வருகிறது. இதுதொடர்பாக அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் ஜிம்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.எனினும் 6 அடி சமூக இடைவெளி, போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை ஜிம் நிர்வாகங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்.

இதை மீறும் ஜிம் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு வழிகாட்டு நெறிகளை அறிவித்தாலும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே தியேட்டர், ஜிம்களின் திறப்பு, மாநில அரசுகளின் கையில் உள்ளன.