உ.பி., ஹரியாணாவில் ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க புதிய சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். லக்னோ அருகே ஜூவான்பூரில் கடந்த 31-ம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
“எங்கள் சகோதரிகள், மகள்கள் ‘லவ் ஜிகாத்தால்’ பாதிக்கப்படுகின்றனர். போலியான பெயர், அடையாளத்தை பயன்படுத்தி எங்கள் சகோதரிகள் ஏமாற்றப்படுகின்றனர். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். அவர்களின் போஸ்டர்கள் முக்கிய சந்திப்புகளில் ஒட்டப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அடிக்கல் நாட்டினார். கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் உலகத்துக்கே முன்னோடியாக செயல்படுகின்றன. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள் குறித்த காலத்தில் வழங்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஹரியாணா அரசு
சில நாட்களுக்கு முன்பு ஹரியாணாவின் பல்லம்கர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற 19 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தாசிப் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அந்த பெண்ணை தாசிப் பின்தொடர்ந்ததாகவும் முஸ்லிம் மதத்துக்கு மாறக் கோரி துன்புறுத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விஎச்பி துணைத் தலைவர் அலோக் குமார் கூறும்போது, “முஸ்லிம் தீவிரவாதிகளால் பொது இடத்தில் இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற ‘லவ் ஜிகாத்’ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ‘லவ் ஜிகாத்’ பெயரில் மதமாற்றம் நடைபெறுகிறது. இந்து பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதை தடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதல்வரின் உத்தரவின்பேரில் இளம்பெண் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மாநிலத்தில் ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.