அமெரிக்காவின் 2-வது கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் 2-வது கொரோனா தடுப்பூசி 94 சதவீதம் பலன் அளிக்கிறது. 

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி அடைந்திருப்பதாகவும் இந்த தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளிப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியானது. இது அந்த நாட்டின் 2-வது கொரோனா தடுப்பூசியாகும். 

இதுகுறித்து மாடர்னா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டிபானி பன்செல் கூறும்போது, “எங்களது கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பலன் அளிக்கிறது. அதாவது எங்களது தடுப்பூசி போடப்பட்ட 100 பேரில் 95 பேர் குணமடைந்தனர். 5 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருந்தது. அவர்களுக்கும் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு இல்லை. எங்களது தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் 6 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்” என்று தெரிவித்தார்.  

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மைனஸ் 75 டிகிரி செல்சியஸில் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்பதால் அதனை கடைநிலை வரை கொண்டு செல்வது கடினம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க முடியும் என்பதால் இந்த தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு பிரிவு தலைமை விஞ்ஞானி அந்தோனி பவுச்சி கூறும்போது, “டிசம்பர் தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனினும் சில நடைமுறை சிக்கல்களால் டிசம்பர் இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும். அமெரிக்க மக்களில் தேவையுள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்” என்றார்.

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, சுவிட்சர்லாந்து, கத்தார், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற ஒப்பந்தம் செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *