அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக வணிகப் போர் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் வேண்டுமென்றே கொரோனா வைரஸை சீனா பரப்பிவிட்டதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை ஹேக்கர்கள் மூலம் சீனா திருடி வருவதாகவும் புகார் கூறியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகம் மூலம் சைபர் திருட்டு நடைபெற்றது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் 19 அமெரிக்க ஆய்வகங்களின் தகவல்களை சீனா திருடியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நகரின் சீன துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக சீனாவின் செங்டூ நகரில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை மூட சீன அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, எங்கள் மீது எந்த தவறும் இல்லை. அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் ராஜ்ஜியரீதியாக தூதரகங்களை மூடி, மூடி விளையாடுகின்றன. அதேநேரம் தென்சீனக் கடலில் போர்க் கப்பல்களை குவித்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றன. மூன்றாம் உலகப் போருக்கு இவர்கள் தீ மூட்டுகிறார்கள் என்று மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.