அமெரிக்க கொரோனா தடுப்பூசி 90% பலன் அளிக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
“உலகம் முழுவதும் சுமார் 43,000 பேருக்கு எங்களது தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்தோம். இதில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவானது.
யாருக்கும் பெரிதாக பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. எங்களது தடுப்பூசி இருதடவை போட வேண்டிய தடுப்பூசியாகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளை தயாரித்துவிடுவோம். அடுத்த ஆண்டுக்குள் 130 கோடி தடுப்பூசிகளை தயாரிப்போம். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள ஆலைகளில் எங்களது தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தடுப்பூசி விநியோகத்தில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு முன்னுரிமை அளிப்போம். அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்” என்று ஆல்பர்ட் தெரிவித்தார்.
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்க அரசு ரூ.14,438 கோடியை முதலீடு செய்துள்ளது.
தடுப்பூசி வெற்றி அடைந்திருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், புதிய அதிபர் ஜோ பைடனும் வரவேற்றுள்ளனர்.