அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற இனவெறியை தூண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரி்ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தேர்தலுக்கு முன்பு 2 பிரதான கட்சிகளிலும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். குடியரசு கட்சியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய விரைவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற அதிபர் ட்ரம்ப், இனவெறியைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.


கடந்த மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினியாபொலிஸில் 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட், போலீஸாரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்தார். அவரது கழுத்தின் மீது போலீஸ்காரர் முழங்காலால் மிதித்து அழுத்தும் வீடியோ உலகம் முழுவதும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.


கருப்பினவிரோத போக்கை கண்டித்து அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையின மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளையின மக்களின் போராட்ட வீடியோ, புகைப்படங்களை அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தில் கருப்பின மக்களின் போராட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளிக்கவில்லை. அதற்கு நேர்மாறாக வெள்ளையின மக்களின் போராட்டத்தை ஆதரித்து இனவெறியை தூண்டி வருகிறார். இதன்மூலம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுக்கிறார் என்று அரசியல் சாணக்கியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *