பென்சில்வேனியா, நவேடா மாகாணங்களை கைப்பற்றிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். சென்னையை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக சென்னையை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
மறைமுக தேர்தல்
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்கள் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
கடந்த 3 நாட்களாக தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. பெரும்பான்மையான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்த நிலையில் ஜோ பைடனுக்கு 264 வாக்குகளும், அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு 214 வாக்குகளும் கிடைத்திருந்தன.
ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, அரிசோனா, நார்த் கரோலினா ஆகிய 5 மாகாணங்களின் முடிவுகளில் இழுபறி நீடித்தது. கடந்த சில நாட்களாக அந்த மாகாணங்களில் வாக்குகள் மிகவும் பொறுமையாக எண்ணப்பட்டன. ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பெரும்பான்மையை எட்டினார்
இந்த பின்னணியில் பென்சில்வேனியா, நெவேடா மாகாணங்களை நேற்றிரவு ஜோ பைடன் கைப்பற்றினார். பென்சில்வேனியாவின் 20 வாக்குகள், நவேடாவின் 6 வாக்குகளும் பைடனுக்கு கிடைத்தது. இதன்மூலம் அவர் 290 வாக்குகளைப் பெற்றார். பெரும்பான்மையை எட்டிய அவர் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். சென்னையை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.
வரும் டிசம்பர் 14-ம் தேதி வாக்காளர் குழு தனது வாக்கினை அதிகாரபூர்வமாக பதிவு செய்யும். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பார்கள்.
தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.
பழைய கார் விற்பனையாளரின் மகன்
கடந்த 1942 நவம்பர் 20-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஸ்கர்டன் நகரில் ஜோ பைடன் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பைடன், பழைய கார்களை வாங்கி விற்று வந்தார். தாய் கேத்தரின் ஜுன், அயர்லாந்தை பூர்விகமாகக் கொண்டவர்.
குடும்பத்தின் மூத்த மகனான ஜோ பைடன், ஒரு தங்கை, 2 தம்பிகளுடன் நடுத்தர குடும்ப பின்னணியில் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் மிகவும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். கடந்த 1965-ல் வரலாறு, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். கடந்த 1968-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார்.
முதல் மனைவி, மகள் உயிரிழப்பு
ஜனநாயக கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவரின் சட்ட ஆலோசகராக பணியைத் தொடங்கிய அவர் கடந்த 1970-ல் ஐனநாயக கட்சியில் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 1972-ம் ஆண்டில் டெலவர் செனட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 29 வயது. மிக இளம் வயதில் செனட் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 எம்.பி.க்களில் பைடனும் ஒருவர்.
கடந்த 1966-ம் ஆண்டில் நீலியா ஹண்டரை, ஜோ பைடன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் பிறந்தனர். செனட் எம்.பி.யான 9 மாதங்களில் பைடன் வாழ்வில் மிகப்பெரிய துயரம் குறுக்கிட்டது.
கடந்த 1972 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் அவரது மனைவி நீலியா ஹண்டரும் மகள் நவோமியும் உயிரிழந்தனர். 2 மகன்கள் படுகாயங்களுடன் உயர் தப்பினர். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள பைடன் திட்டமிட்டார். எனினும் மகன்களுக்காக அந்த எண்ணத்தை கைவிட்டு மீண்டும் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்.
தற்கொலை எண்ணம்
சிறு வயது மகன்களை கவனித்து கொள்வதற்காக செனட் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்தார். கட்சி தலைவர்கள், குடும்பத்தினர் ஆலோசனையால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். மகன்களுக்காக அவரது வீடு இருந்த டெலவரில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு தினமும் ரயிலில் நீண்ட தொலைவு பயணம் செய்தார்.
இதன்பின் கடந்த 1977-ம் ஆண்டில் மருத்துவர் ஜில் ஜேக்கபை, பைடன் திருமணம் செய்தார். இரண்டாவது திருமணத்தின் மூலம் அவருக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார்.
ஒட்டுமொத்தமாக 6 முறை செனட் அவைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார்.
மூத்த மகன் மரணம்
ஜோ பைடனின் மூத்த மகன் பவ் பைடன், ராணுவத்தில் இணைந்து இராக் போரில் பங்கேற்றார். கடந்த 2015-ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக பவ் பைடன் உயிரிழந்தார். இதுவும் ஜோ பைடனின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூத்த மகனின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைளால் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டினார்.
ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான அவர், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது.
“அதிபர் ட்ரம்பிடம் இருந்து அமெரிக்காவை மீட்கவே நான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் இடைக்கால அதிபர் மட்டுமே” என்று தனது பிரச்சாரங்களில் பைடன் கூறினார். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சோகங்கள், வயது முதுமை ஆகிய காரணங்களால் அவர் இவ்வாறு மனம் திறந்து பேசியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்திய, ஆப்பிரிக்க வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பைடன் தேர்வு செய்தார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலாவின் பூர்விகம் குறித்து பைடன் பலமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
பைடனின் இந்திய தொடர்பு
ஜோ பைடனுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரது தாயார் கேத்தரின் ஜுன் அயர்லாந்தை சேர்ந்தவர். தந்தை ஜோசப் பைடன், இங்கிலாந்து, பிரெஞ்சு, அயர்லாந்து வம்சாவழியை சேர்ந்தவர்.
ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்தார். அப்போது மும்பையில் நடந்த தொழிலதிபர் மாநாட்டில் அவர் சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார்.
“எனது மூதாதையர்கள் கிழக்கு இந்திய கம்பெனியில் பணியாற்றினர். அவர்களில் ஒருவர் இந்திய பெண்ணை திருமணம் செய்து இந்தியராகவே மாறிவிட்டார். நான் முதல்முறையாக செனட் எம்.பி.யாக பதவியேற்றபோது மும்பையில் இருந்து எனக்கு பாராட்டு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர். தனது பெயரின் இறுதியில் என்னை போலவே அவரும் பைடன் என்று குறிப்பிட்டிருந்தார். எனது பணிச்சுமை காரணமாக அந்த கடிதத்தை எழுதியவரை தேடாமல் விட்டுவிட்டேன். அது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
டெலவரில் உள்ள ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் துணை அதிபராக அவர் பதவி வகித்தபோது இந்திய வம்சாவளி அதிகாரிகளே அவருடன் இணைந்து பணியாற்றினர். இதை அவரே பெருமையாக கூறியுள்ளார்.
“அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு கரோனா வைரஸ், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன். அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவேன்” என்று பைடன் அறிவித்திருப்பது அமெரிக்கர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.