அமெரிக்க மக்கள் இந்தியாவுக்கு அமோக ஆதரவு கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி
அமெரிக்காவில் சீனாவுக்கான ஆதரவு மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரம் இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் அமோக ஆதரவு அளிக்கின்றனர்.


லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. வர்த்தகரீதியாக சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் சீனாவின் வணிக நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்த பின்னணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட், அமெரிக்க மக்களிடையே இந்தியா, சீனா தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதில் அமெரிக்க மக்களிடம் 2 கேள்விகள் முன்வைக்கப்பட்டன.


இந்தியா, சீனா இடையே போர் மூண்டால் யாரை ஆதரிப்பீர்கள் என்று முதல் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 63.6 சதவீத மக்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்று பதில் அளித்தனர். 32.6 சதவீதம் பேர் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளித்தனர். 3.8 சதவீதம் பேர் மட்டுமே சீனாவுக்கு ஆதரவு அளித்தனர்.
அடுத்ததாக இந்தியா, சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்றால் யாரை ஆதரிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு 60.6 சதவீத மக்கள் யாருக்கும் ஆதரவில்லை என்றனர். 36.3 சதவீதம் பேர் இந்தியாவை ஆதரிப்போம் என்று கூறினர். 3.1 சதவீதம் பேர் சீனாவுக்கு ஆதரவு அளித்தனர்.
இந்திய பெருங்கடலில் சீனா கால் ஊன்றுவதை தடுக்க அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதேபோல தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் 4 நாடுகளும் ஓரணியில் அணிவகுத்து நிற்கின்றன.
லோவி இன்ஸ்டிடியூட் கருத்துக் கணிப்பில் பெரும்பான்மை அமெரிக்க மக்கள் இந்திய, சீன போரை விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனினும் அமெரிக்காவில் சீனாவுக்கு மிக சொற்ப அளவு ஆதரவே உள்ளது. சுமார் 35 சதவீத மக்கள் இந்தியாவை விரும்புகின்றனர். அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியிலும் இந்தியாவின் ஆதரவாளர்கள் நிறைந்துள்ளனர். அமெரிக்க அரசு, ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தியாவுக்கு அரணாக செயல்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *