அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதிக்க திட்டம்

அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை மறைத்து ஒட்டுமொத்த உலகத்தையும் சீனா உருக்குலைத்து விட்டதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த வைரஸ் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உலக நாடுகள் விழித்திருக்கும். ஆனால் சீனா வேண்டுமென்றே வைரஸ் பரவ அனுமதித்தது என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.


இதன்காரணமாக சீனாவில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையறிந்த சீனா, லடாக் எல்லையில் வேண்டுமென்றே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அஞ்சும் என்பது சீனாவின் வஞ்சக திட்டமாகும்.


சீனாவுக்கு எதிராக இந்தியா ராஜதந்திர, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீன வீரர்களை விரட்டியடித்தனர். இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்.


அடுத்து சீனா மீது வர்த்தக போரை தொடுத்த இந்தியா, அந்த நாட்டின் பிரபலமான டிக்டாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இதனால் சீன நிறுவனங்கள் ஆட்டம் கண்டது.


சர்வதேச அளவிலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நிறுவனங்களும் காய் நகர்த்தி வருகின்றன. சீன நிறுவனமான ஹுவாவேய் ஐரோப்பிய நாடுகளில் 5 ஜி சேவையை தொடங்க பெரும் தொகையை முதலீடு செய்திருந்தது. ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஹுவாவேய் சேவைக்கு தடை விதித்துள்ளன.


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு சீன பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்ந சூழ்நிலையில் இந்தியாவை போன்று டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், “சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *