நானே அமெரிக்க அதிபர்.. டொனால்டு ட்ரம்ப் பிடிவாதம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி பெற்றுள்ளேன் என்று தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஐனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதை ஏற்க மறுத்து வரும் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், நீதிமன்றங்களில் அடுத்தடுத்து வழக்குகளை தொடுத்து வருகிறார். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ட்ரம்ப், பைடனின் ஆதரவாளர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் இன்று பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். 

“அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. மோசடி மூலம் நாட்டை அபகரிக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தேர்தல் மோசடிகள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மூலம் காட்சிகள் மாறும். 

தபால் ஓட்டுகளில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டிருக்கிறது. பல வாக்கும் எண்ணும் மையங்களில் ஜனநாயக கட்சியினர் தங்களுக்கு சாதகமாக முடிவுகளை மாற்றியுள்ளனர். 

போலியான ஊடகங்கள் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றன. எங்கள் தரப்பு விளக்கத்தை அந்த ஊடகங்கள் ஏற்கவில்லை. அதிபர் தேர்தலில் நானே வெற்றி பெற்றிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“உலகின் பல்வேறு நாடுகளில் சர்வாதிகாரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். அந்த சர்வாதிகாரிகள், அப்பாவிகளை கொலை செய்கிறார்கள், சிறையில் அடைக்கிறார்கள். கேலிக்கூத்தான தேர்தலை நடத்துகிறார்கள், செய்தியாளர்களை ஒடுக்கிறார்கள். 

அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஓர் அரசு ஊழியர். அவர் நாட்டின் நலனுக்கு முதலிடம் அளித்து பணியாற்ற வேண்டும். தனது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் செயல்படக்கூடாது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை ட்ரம்ப் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவின் எதிரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *