இந்திய, சீன மக்களை நேசிக்கிறேன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர்.


போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்தன. பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லைக்கு நேரில் சென்று சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எல்லையில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கியுள்ளது.


இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலேமெக்கானி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய, சீன மக்களை நேசிக்கிறார். இரு நாடுகளிடையே அமைதி நிலவ அதிபரால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த புதன்கிழமை கூறும்போது, ” இந்தியா எங்களது முக்கிய பங்காளி. இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. சீன எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தோம்” என்று தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் விவகாரத்தால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை புறக்கணித்து வருகின்றன. இந்தியா மட்டுமன்றி 21 அண்டை நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை உள்ளது. இதனால் சர்வதேச அளவில் சீனா தனிமைப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *