அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நாள்தோறும் 2 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்று அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது நாள்தோறும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ஆரம்பத்தில் 500 ஆக இருந்த வைரஸ் தொற்று தற்போது 25 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.
உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 7.42 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் மசாசேசூட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஹஷீர் ரஹ்மந்நாத், லிம், ஜான் ஸ்டெர்மன் ஆகியோர் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
அதில்,”அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நாள்தோறும் 2 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும். அமெரிக்காவில் நாள்தோறும் 95 ஆயிரம் பேர், தென்னாப்பிரிக்காவில் 21 ஆயிரம் பேர், ஈரானில் 17 ஆயிரம் பேர், இந்தோனேசியாவில் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். உலகிலேயே கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் தற்போது ஒரு கோடியே 19 லட்சத்து 54 ஆயிரம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 கோடி முதல் 60 கோடியாக உயரும் என்று மசாசேசூட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.