சீன அதிபரால் அச்சுறுத்தல்

சீன அதிபரால் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. 

‘குவாட்’ என்றழைக்கப்படும் இந்த கூட்டணி நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 

அப்போது இந்திய, பசிபிக் பிராந்தியம், லடாக் எல்லை பிரச்சினை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

டோக்கியோவில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய மைக் பாம்பேயோ அந்த நாட்டு ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சியால் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் விரிவாக விவாதித்தோம். 

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி வருகிறது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து வருகிறது. 

கரோனா வைரஸை சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்ட விதத்தை உலகம் நன்கறியும். 

அந்த வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் (லடாக்) சுமார் 60,000-க்கும் சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சீனா காய் நகர்த்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் சீனா கால் பதித்து வருகிறது. இது அந்த நாடுகளுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும். 

சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. 

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இனிமேலும் சீனாவின் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது. 

டிக்டாக் செயலி மீதான நடவடிக்கையை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது பாதுகாப்பு விவகாரம் சார்ந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் கூறியதாவது:

அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 

இந்தியாவின் எல்லைக்கோடு பகுதியில் அந்த நாடு அத்துமீற முயற்சிக்கிறது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு காண முடியாது. 

இந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேறு வழிகளைத்தான் கையாள வேண்டும்.

‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு சீனா கடன் வழங்கியுள்ளது. அந்த நாடுகளில் சீன நிறுவனங்கள் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

சீனாவிடம் கடன் பெற்ற நாடுகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றன. அந்த நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது. 

சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவாய், இசட்.டி.இ. ஆகியவை பல்வேறு நாடுகளில் கால் பதித்துள்ளன. அந்த நிறுவனங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பிரிட்டன், செக் குடியரசு, டென்மார்க், லாட்வியா, போலந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகள் சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை புறக்கணித்து வருகின்றன. 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஹுவாய் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கருவிகளைக்கூட பயன்படுத்துவது இல்லை.

21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடாக இந்தியா இருக்கும். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் கைகோத்து செயல்படும். 

சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளுடனும் அமெரிக்கா நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. 

சீன மக்களை அமெரிக்கா நேசிக்கிறது. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. 

இதை கட்டுப்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *