சென்னையில் விசிக பிரமுகர் கொலை – அதிர்ச்சி பின்னணி

சென்னையில் விசிக பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் பகுதி துணைச் செயலாளராக இருந்தார். அவரின் மனைவி பிரியா (38).

இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தநிலையில் கேசவன், நேற்று வீட்டின் அருகே தனியாக நடந்துச் சென்றுகொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், கேசவனிடம் தகராறில் ஈடுபட்டது.பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் கேசவனை வெட்டியது. அதனால் அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க கேசவன் ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்மகும்பல் சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தது.கேசவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். அதைப்பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கேசவனை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தண்டையார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கேசவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கள்ளசந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

அதன்காரணமாக தண்டையார்பேட்டையில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. விசிக பிரமுகர் கேசவன, மதுபாட்டில் விற்பனை மோதலில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல், சேகவனை வெட்டி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.அதன்அடிப்படையில் போலீஸார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

அதிர்ச்சி பின்னணி

விசிக பிரமுகர் கேசவன், வீட்டின் அருகே பெரியபாளையத்தம்மன் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். ஆடிமாதத்தின் இறுதிநாளான நேற்று அம்மன் கோயிலில் கேசவன் கூழ் காய்ச்சி கொண்டிருந்துள்ளார்.

தனியாக கேசவன் நிற்பதைப்பார்த்த மர்ம கும்பல் அங்கு வந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்தக் கும்பல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, பைக் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றது.

கேசவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உருட்டுகட்டையை தூக்கிக் கொண்டு மதனின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது மதனின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் உருட்டுகட்டையால் மதனின் வீட்டின் சுவிட்ச் போர்ட்டை அடித்து நொறுக்கினர்.

இந்தச் சமயத்தில் போலீஸார் அங்கு வந்தனர். உடனே பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மதனுக்கும் கேசவனுக்கும் இடையே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதன், கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்கும் தகவலை கேசவன்போலீஸாருக்கு இன்பார்மர் போல தகவல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த முன்விரோதத்தால்தான் கேசவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது போலீஸார் மதனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *