8 போலீஸாரை துடிதுடிக்க கொன்ற விகாஸ் துபே சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ட பிரபல ரவுடி விகாஸ் துபே இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.


உத்தர பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. உத்தர பிரதேசம் மட்டுமன்றி மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, நில மோசடி வழக்குகள் உள்ளன.

8 போலீஸார் சுட்டுக் கொலை


கடந்த 2-ம் தேதி கான்பூர் அருகே பிகாரு கிராமத்தில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை கைது செய்ய உள்ளூர் போலீஸார் சென்றனர். சரணடைய மறுத்த அவரும் அவரது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விகாஸ் துபே


இதுதொடர்பாக 81 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 11 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடி விகாஸ் துபேவுடன் தொடர்பில் இருந்த 68 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவரது வலது கரமான அமர் துபே, கூட்டாளி பிரபாத் மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரூ.5 லட்சம் பரிசு தொகை


விகாஸ் துபேவை கண்டுபிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வடமாநிலங்கள் முழுவதும் சல்லடை போட்டு தேடி வந்தனர். அவரை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் உள்ள கோயிலில் பதுங்கியிருந்த விகாஸ் துபே நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு சாலை மார்க்கமாக அவரை போலீஸார் அழைத்து வந்தனர்.

ரவுடி சுட்டுக் கொலை


இன்று காலை 6.30 மணிக்கு கான்பூர் அருகே வந்தபோது, விகாஸ் துபே இருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதை பயன்படுத்தி அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விகாஸ் துபேயின் நெஞ்சு, இடுப்பில் குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக 7.55 மணிக்கு அறிவிக்கப்பட்டது.


மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் உள்ள பிரபல கோயிலில் விஐபி பாஸ் பெற்று விகாஸ் துபே பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு விஐபி பாஸ் வாங்கி கொடுத்தது யார் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.


அவருக்கும் உத்தர பிரதேச போலீஸ் மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. விகாஸ் துபேவுடன் அனைத்து உண்மைகளும் குழிதோண்டி புகைக்கப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா, மூத்த மகன் ஆகாஷை போலீஸார் பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *