சென்னை, திருச்சி, வேலூரில் மூடப்பட்ட சந்தைகளை திறக்க வேண்டும் – முதல்வரிடம் விக்கிரமராஜா வேண்டுகோள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா முதல்வர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:


மக்கள் நலன் கருதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த சில்லரை வணிகர்களின் வாழ்வதாரம் முடக்கப்பட்டு கேள்விகுறியாகியுள்ளது.

திருமழிசை தற்காலிக மார்க்கெட் சேறும் சகதியுமாக உள்ளது. அதளால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் விவசாய பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.


திருச்சி நகரத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மொத்த வணிக வளாகத்தை தற்காலிகமாக அரசு வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது. மீண்டும் காந்தி மார்க்கெட்டை அதே இடத்தில் இயங்கிட அரசு அனுமதிக்க வேண்டும்.

மேலும் மூடப்பட்ட மொத்த வணிக மார்க்கெட்களில் உள்ளே முடக்கி வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி முதலீடுகளை முழுவதும் இழக்கும் நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சில்லரை காய்கறி பூ பழ வியாபாரிகள் என இத்தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடமாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போயுள்ளனர்.


சென்னை கோயம்பேடு மார்க்கெட், திருச்சி காந்தி மார்க்கெட், வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் பிற மாவட்டங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறி, மளிகை, மீன் இறைச்சி மார்க்கெட்களை அரசு உடனடியாக உரிய வழிகாட்டுதல்களுடனும் பாதுகாப்புடனும் திறந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள், தொழிலாளர்களை வாழ்வதாரத்தை காத்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *