விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் இன்று காலை விரிவான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. தனிமனித இடைவெளி, போதிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து ஊர்வலம் நடத்தப்படும்.

இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.
“விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது மதரீதியிலான உணர்வுபூர்வமான விஷயம். எனவே மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி தளர்வுகள் அளிக்கப்படுமா” என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆணையர்கள் தினகரன், அருண் ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர்.
பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் அறிவுரை கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கூறும்போது, போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.