பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் ரிக்சா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தார். அவருடன் அவரது மூத்த மகள் ஜோதி (வயது 15) தங்கியிருந்தார். விபத்து ஒன்றில் காயமடைந்த மோகன் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. மோகன் பாஸ்வான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு நச்சரித்தார்.
வாடகை கொடுக்க வழியில்லாததால் தந்தையும் மகளும் வீட்டை காலி செய்துவிட்டு பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்தனர். பேருந்து, லாரி, ரயில் வசதி இல்லாத நிலையில் இருவரும் சைக்கிளில் புறப்பட்டனர்.
விபத்தில் காயடைந்த மோகன் பாஸ்வானால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை. அவரை பின்னால் அமர வைத்து 15 வயது மகள் ஜோதி சைக்கிள் மிதித்தார். சுமார் 8 நாட்கள் 1,200 கி.மீ.தொலைவு சைக்கிள் ஓட்டி தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தார் ஜோதி.
இந்த சோக சம்பவம் ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்காகூட ட்விட்டர் வாயிலாக, ஜோதிக்கு புகழாரம் சூட்டினார்.

பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஜோதியின் குடும்பத்துக்கு தாராளமாக நிதியுதவி செய்தனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ரூ.1 லட்சம் வழங்கினார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரூ.50 ஆயிரம், லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் ரூ.50 ஆயிரம் என பணம் குவிந்தது.
தற்போது ஜோதியின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்துக்கும் மேல் பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தில் சொந்த கிராமத்தில் அவர்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். மேலும் ஜோதிக்கு புதிதாக 4 சைக்கிள்கள், ஏராளமான பரிசு பொருட்களும் கிடைத்துள்ளன.
சைக்கிள் சிறுமி ஜோதி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் அண்மையில் வதந்தி பரவியது. போலீஸ் விசாரணையில் இது புரளி என்பது தெரியவந்தது.
ஜோதியும் அவரது குடும்பத்தினரும் பீகாரின் தர்பங்காவில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களின் வாழ்கைத் தரம் உயர்ந்து வருகிறது.