சைக்கிள் சிறுமியின் வைரல் வீடியோ வெறும் வதந்தி..

சைக்கிள் சிறுமியின் வைரல் வீடியோ வதந்தி என்பது தெரியவந்துள்ளது.


பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் டெல்லியில் ரிக்சா ஓட்டி வந்தார். ஒரு விபத்தில் காயமடைந்த அவர் வீட்டில் ஓய்வில் இருந்தார். கடந்த மார்ச், ஏப்ரலில் ஊரடங்கு அமலில் இருந்தபோது வருமானம் இன்றி மோகன் பாஸ்வான் பெரும் அவதிப்பட்டார். அவருக்கு மனைவி, 5 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜோதி (15) தந்தையுடன் தங்கியிருந்தார்.


இக்கட்டான நேரத்தில் பிஹாரில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல தந்தையும் மகளும் திட்டமிட்டனர். ரயில், பேருந்து, வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் இருவரும் துணிச்சலாக சைக்கிளில் புறப்பட்டனர். மோகன் பாஸ்வானால் சைக்கிள் ஓட்டமுடியாத நிலையில், மகள் ஜோதி 8 நாட்கள் சுமார் 1,500 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டி, தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தார்.


இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி தந்தை, மகள் பாசத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.


இந்நிலையில் சைக்கிள் சிறுமி ஜோதி பலாத்தாரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் பரவின. அவற்றில், ஜோதியும் அவரது தந்தையும் சைக்கிளில் செல்லும் படங்களும், ஒரு பெண் தலைகுப்புற கிடக்கும் படமும் இடம்பெற்றிருந்தன.


இந்த தகவல் வதந்தி என்பது இப்போது தெரியவந்துள்ளது. இறந்து கிடப்பதாக வெளியான புகைப்படத்தில் இருக்கும் சிறுமி, பிஹாரின் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த ஜோதி குமாரி ஆவார். 13 வயதாகும் இந்த சிறுமி அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.


உயிரிழந்த ஜோதி குமாரியின் புகைப்படத்தையும் சைக்கிள் சிறுமி ஜோதி பாஸ்வானின் சைக்கிள் சாகச படங்களையும் இணைந்து இணையத்தில் வதந்தி பரப்பப்பட்டிருப்பதாக பிஹார் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *