இந்திய, சீன எல்லையில் துப்பாக்கி சண்டை

இந்திய, சீன எல்லையில் துப்பாக்கி சண்டை நடைபெற்று உள்ளது.

கடந்த 4 மாதங்களாக லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடிக்கிறது. கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் தெரிவித்துள்ளன.

பான்காங் ஏரியில் அத்துமீறல்

ராணுவ, ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

கடந்த 29-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

லடாக் எல்லையில் சீனாவை குறிவைத்து ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
லடாக் எல்லையில் சீனாவை குறிவைத்து ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.

அவர்களை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள், பான்காங் ஏரியின் பிளாக் டாப், ஹெல்மெட் பகுதியில் 3 மலை முகடுகளை தங்கள் வசமாக்கியுள்ளனர். மேலும் ஏரிப் பகுதியின் 30 நிலைகளில் இந்தியா ஆதிக்க நிலையில் உள்ளது.

இந்திய ராணுவ தளபதி நாராவனே லடாக் எல்லையில் அண்மையில் நேரில் சென்று, ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் லடாக் எல்லையில் அதிநவீன டாங்கிகள், ஏவுகணைகள், சுகோய் ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கள்கிழமை பான்காங் ஏரியின் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் அருகருகே வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது இருதரப்பினரும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையை தாண்டக்கூடாது என்று எச்சரிக்கும்விதமாக பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

சீன ராணுவ அறிக்கை

சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவ வீரர்கள், சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். ஒப்பந்தங்களை மீறி துப்பாக்கியால் சுட்டனர். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எல்லையில் சமநிலையை ஏற்படுத்த சீன ராணுவம் பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லையில் துப்பாக்கியால் சுட்ட இந்திய வீரர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிசூழ்ந்த லடாக் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ஐடிபிபி வீரர்கள் .
பனிசூழ்ந்த லடாக் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் .

இந்திய ராணுவம் மறுப்பு

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டவில்லை. எவ்வித அத்துமீறல்களிலும் ஈடுபடவில்லை. துப்பாக்கியால் சுடவில்லை.

எல்லை பிரச்சினை தொடர்பாக ராணுவ, ராஜ்ஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் சீன ராணுவம் செயல்படுகிறது.

எல்லையில் அமைதியை நிலைநாட்டவே இந்திய ராணுவம் விரும்புகிறது. எனினும் இந்திய மண், ஒருமைப்பாடு, இறையாண்மையை பாதுகாக்க எந்த விலையை கொடுக்க நேரிட்டாலும் தயங்கமாட்டோம். சீன ராணுவம் தவறான தகவல்களை வெளியிட்டு சர்வதேச சமூகத்தை குழப்ப முயற்சி செய்து வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள தலையங்க கட்டுரையில், “எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்தியா, சீனா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

சில அசாம்பாவிதங்களை தவிர்த்து கடந்த 40 ஆண்டுகளாக இருநாட்டு எல்லையில் அமைதியில் நீடிக்கிறது. எல்லைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவே சீனா விரும்புகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கியும் சந்தித்துப் பேசினர்.

இதன்பிறகு எல்லையில் போர் பதற்றம் தணியும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனா மீண்டும் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நாராவனே டெல்லியில் நேற்றுசந்தித்துப் பேசினார். அப்போது லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதற்கு பிறகு பாதுகாப்புத் துறையின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் லடாக் எல்லை விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

எல்லையில் படைகள் குவிப்பு

லடாக் எல்லையில் அதிநவீன டாங்கிகள், ஏவுகணைகள், உளவு விமானங்கள், சுகோய் போர் விமானங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திபெத் வம்சாவளியை சேர்ந்த எஸ்.எப்.எப். படை வீரர்களும் லடாக் எல்லையில் களமிறக்கப்பட்டுள்ளனர். லடாக் மட்டுமன்றி வடகிழக்கு மாநில சீன எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *