லடாக்கில் சீன வீரர்களை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்

லடாக்கில் சீன வீரர்களை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள், அங்கு 3 மலைமுகடுகளை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அவர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இருநாடுகளின் வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

சீன தரப்பில் 50 வீரர்கள் பலியாகினர். ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

பான்காங் ஏரியில் அத்துமீறல்

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் சுமார் 500 சீன வீரர்கள் அத்துமீற நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி ஓட ஓட விரட்டினர்.

லடாக் எல்லை பகுதி நோக்கி விரையும் இந்திய ராணுவ வாகனங்கள்.
லடாக் எல்லை பகுதி நோக்கி விரையும் இந்திய ராணுவ வாகனங்கள்.

இதன்காரணமாக லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் 3 மலை முகடுகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அந்தப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக சாலை அமைத்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியது.

3 மலை முகடுகள்

இதைத் தொடர்ந்து பான்காங் ஏரியின் தெற்கு கரையில் பிளாக் டாப், ஹெல்மெட் பகுதிகளில் அமைந்துள்ள 3 மலைமுகடுகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அங்கு சீன ராணுவம் பொருத்தியிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன.

“பிளாக் டாப் பகுதியின் மலை முகடுகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயற்சி செய்தது. இந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம். 3 முக்கிய மலைமுகடுகள் முழுமையாக இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பான்காங் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம்.
பான்காங் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம்.

அவசர ஆலோசனை

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நாராவனே உள்ளிட்டோர் பங்கேற்றனர். லடாக்கில் சீன வீரர்களின் அத்துமீறலை தடுப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் பீரங்கிகளை குவித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் பீரங்கிகளை எல்லைக்கோட்டுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளது.

தென்சீனக் கடல்

லே விமானப் படைத் தளத்தில் சுகோய் ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், விமானப்படையில் அண்மையில் சேர்க்கப்பட்டன.

இவை விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
மேலும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்களோடு இணைந்து இந்திய போர்க்கப்பல்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *