வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு பெற்றுள்ளது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய வழித்தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் விரைவில் தொடங்கும். விம்கோ நகரில் மெட்ரோ பணிமனை அமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.